HomeSpecial Airtcleமனிதர்கள் இல்லாவிட்டாலும் உயிர்வாழுமா கரப்பான் பூச்சிகள்? விஞ்ஞானம் சொல்லும் உண்மை என்ன?

மனிதர்கள் இல்லாவிட்டாலும் உயிர்வாழுமா கரப்பான் பூச்சிகள்? விஞ்ஞானம் சொல்லும் உண்மை என்ன?

மனித இனம் அழிந்தாலும் கரப்பான் பூச்சிகள் உயிர்வாழும் என்ற கருத்து நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு அறிவியல் ஆதாரம் என்ன? உண்மையில் கரப்பான் பூச்சிகள் ஏன் இவ்வளவு வலிமையானவை? என்பது குறித்து பார்க்கலாம்.

பல கோடி ஆண்டுகளாக பூமியில் வாழும் உயிரினம்

விஞ்ஞானிகளின் ஆய்வுகளின்படி, கரப்பான் பூச்சிகள் சுமார் 32 கோடி ஆண்டுகளாக பூமியில் வாழ்ந்து வருகின்றன. அதாவது, டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்பே இவை பூமியில் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூமியில் ஏற்பட்ட பல இயற்கை பேரழிவுகளையும், காலநிலை மாற்றங்களையும் தாண்டி இன்றும் உயிர்வாழும் திறன் கொண்ட உயிரினங்களில் கரப்பான் பூச்சியும் ஒன்றாகும்.

தலை துண்டிக்கப்பட்டாலும் சில நாட்கள் உயிருடன் இருக்குமா?

மற்ற உயிரினங்களை விட கரப்பான் பூச்சியின் உடல் அமைப்பு மாறுபட்டது. மனிதர்களைப் போல நுரையீரல் மூலம் அல்லாமல், உடலின் பல பகுதிகளில் உள்ள ஸ்பைரக்கிள் எனப்படும் சிறிய துளைகள் வழியாக சுவாசிக்கிறது. அதனால், தலை துண்டிக்கப்பட்டாலும் உடனடியாக சுவாசம் நின்றுவிடாது. மேலும், அவற்றின் இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருப்பதால் அதிக ரத்த இழப்பும் ஏற்படாது. இதன் காரணமாக சில நாட்கள் அல்லது சில வாரங்கள் வரை உயிருடன் இருக்க முடியும்.

அனைத்து சூழல்களுக்கும் ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் திறன்

கரப்பான் பூச்சிகள் மிகவும் வேகமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவை. அதிக வெப்பம், ஈரப்பதம் அல்லது உணவுப் பற்றாக்குறை போன்ற சூழல்களிலும் வாழும் திறன் இவற்றுக்கு உள்ளது. தாவரங்கள், இறைச்சி, காகிதம், தோல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உணவாக எடுத்துக்கொள்ளும் தன்மையும் அவற்றின் உயிர்வாழும் திறனை அதிகரிக்கிறது.

அணுகதிர்வீச்சை மனிதர்களைவிட அதிகமாக தாங்குமா?

1945-ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு, சில கரப்பான் பூச்சிகள் உயிருடன் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால், அணுகதிர்வீச்சை அதிக அளவில் தாங்கும் உயிரினமாக கரப்பான் பூச்சி கருதப்படுகிறது. சில ஆய்வுகள், மனிதர்களை விட அதிக அளவிலான கதிர்வீச்சை கரப்பான் பூச்சிகள் தாங்கக்கூடும் எனக் கூறுகின்றன.

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் எதிர்ப்பு சக்தி

கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களில் நச்சுப் பொருட்களை எதிர்கொள்ளும் திறன் இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், ஒரே வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தும்போது, காலப்போக்கில் அவற்றுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகும்.

மனித இனம் அழிந்தாலும் கரப்பான் பூச்சிகள் உயிர்வாழும்

மனிதர்கள் இல்லாத சூழலிலும் கரப்பான் பூச்சிகள் நீண்ட காலம் உயிர்வாழும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எப்படிப்பட்ட சூழிநிலை வந்தாலும் உயிர்வாழும் திறன் மற்றும் சமாளிக்கும் ஆற்றல் ஆகியவற்றால், உலகின் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட உயிரினங்களில் கரப்பான் பூச்சி முக்கிய இடம் பெறுகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments