உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு கேன்சர் வருமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் முக்கிய உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்றாக உடல் பருமன் கருதப்படுகிறது. இது வெறும் உடல் எடை அதிகரிப்பாக மட்டும் பார்க்க கூடாது. உடல் பருமன் பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு அடித்தளமாக அமைகிறது.

உடல் பருமனால் புற்றுநோய் வருமா?

உடல் பருமன் நேரடியாக புற்றுநோயை உருவாக்கும் என்று மருத்துவர்கள் கூறவில்லை. இருப்பினும், அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு சில வகை புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் மற்றவர்களை விட அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர்களின் விளக்கப்படி, உடல் பருமனை ஒரு சாதாரண பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல், ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். இதனால் பல்வேறு உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

உடல் பருமன் காரணமாக இதய நோய், உயர் ரத்த அழுத்தம், டைப்-2 நீரிழிவு, கொழுப்பு கல்லீரல், பக்கவாதம் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதனுடன் சில வகை புற்றுநோய்களுக்கும் உடல் பருமன் ஒரு அபாயக் காரணியாக கருதப்படுகிறது. அதனால் உடல் எடை அதிகரிப்பை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களை குறைக்க உதவும்.

வாழ்க்கை முறையே முக்கிய காரணம்

அதிக கலோரி கொண்ட உணவுகள், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் பழக்கம் மற்றும் போதிய தூக்கமின்மை ஆகியவை உடல் பருமனுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த பழக்கங்கள் நீண்ட காலம் தொடரும்போது உடலில் கொழுப்பு அதிகரித்து, பல்வேறு வளர்சிதை மாற்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கின்றன.

எப்படி உடல் எடையை கட்டுப்படுத்தலாம்?

உடல் பருமனை குறைக்க கடுமையான டயட் மட்டும் போதுமானதல்ல. சமநிலையான உணவு, தினசரி உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் மருத்துவ ஆலோசனையுடன் உடல் எடையை பராமரிப்பது நல்ல பலனை அளிக்கும்.

புற்றுநோய் ஏன் அதிகரித்து வருகிறது?

முன்னொரு காலத்தில் வயதானவர்களிடம் அதிகம் காணப்பட்ட புற்றுநோய், தற்போது இளைஞர்களிடமும் அதிகரித்து வருகிறது. இதற்கு பரம்பரை காரணங்கள் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கை முறைகளும் முக்கிய பங்காற்றுகின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, புகையிலை, மது மற்றும் மனஅழுத்தம் போன்றவை நீண்ட காலத்தில் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

ஆரம்ப அறிகுறிகளை கவனிக்க வேண்டும்

விளக்கம் இல்லாத உடல் எடை குறைதல், நீண்ட நாட்கள் நீடிக்கும் இருமல், அசாதாரண இரத்தப்போக்கு, உடலில் கட்டிகள் தோன்றுதல், குடல் இயக்கத்தில் மாற்றம் மற்றும் தொடர்ச்சியான சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் பல புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

எளிய வாழ்க்கை முறை

தொடர்ச்சியான ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை உடலில் செல்களின் இயல்பான செயல்பாடுகளை பாதித்து, நீண்ட காலத்தில் நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தினசரி நடைப்பயிற்சி, வீட்டில் தயாரித்த சத்தான உணவு, போதுமான தூக்கம், புகையிலை மற்றும் மதுவை தவிர்த்தல், உடல் எடையை கட்டுப்படுத்துதல் போன்ற எளிய பழக்கங்கள் நீண்டகால ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.

HTML tutorial