சென்னை மண்டலத்தில் வசிக்கும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கும் சிறப்பு நடவடிக்கையை கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. இந்த சேவை ஆகஸ்ட் 4 முதல் 6 வரை மூன்று நாட்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம், வயது முதிர்வு, உடல்நலக் காரணங்களால் நியாய விலைக் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத பயனாளிகள், வீடுகளில் இருந்த படியே அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
1,346 நியாய விலைக் கடைகள் மூலம் சேவை
சென்னை மண்டலத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,346 நியாய விலைக் கடைகள் இந்த சிறப்பு விநியோகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம் சென்னை மாநகரத்தின் 19 மண்டலங்களில் செயல்படுத்தப்படுகிறது.
19 மண்டலங்கள் எவை?
ஆவடி
அம்பத்தூர்
அண்ணா நகர்
சிதம்பரனார் நகர்
கொளத்தூர்
பெரம்பூர்
ஆர்.கே. நகர்
ராயபுரம்
திருவொற்றியூர்
வில்லிவாக்கம்
ஆயிரம் விளக்கு
சேப்பாக்கம்
மயிலாப்பூர்
சைதாப்பேட்டை
தியாகராய நகர்
சோழிங்கநல்லூர்
பரங்கிமலை
தாம்பரம்
மதுரவாயல்
பயனாளிகளுக்கு என்ன நன்மை?
வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால், நீண்ட நேரம் காத்திருப்பது, போக்குவரத்து சிரமம் மற்றும் உடல்நல பாதிப்பு போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன. குறிப்பாக தனியாக வசிக்கும் முதியோர் மற்றும் கடுமையான மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த சேவை பெரும் உதவியாக இருக்கும்.
