மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால். கொசுக்கள் வேகமாக பெருகி, மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் வேகமாக பரவி வருகின்றன.
மலேரியா, டெங்கு பாதிப்பு
மும்பையில் ஜூன் மாதத்தில் பதிவான மலேரியா பாதிப்பு 655 ஆக இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் அது 1,380 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், டெங்கு பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் 266 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஜூலை மாதத்தில் அந்த எண்ணிக்கை 466 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : போலி ஊழியர்கள் பெயரில் ரூ.6.41 கோடி சம்பள மோசடி
கொசுத் தொல்லையால் மக்கள் கடும் அவதி
மும்பையின் பல்வேறு குடியிருப்பு பகுதிகள், குடிசைப்பகுதிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கொசுத் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பல பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகள் போதுமான அளவில் நடைபெறவில்லை என்றும், புகை மருந்து தெளித்தல் மற்றும் லார்வா ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் குடியிருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடவடிக்கை அவசியம்
நோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், மும்பை மாநகராட்சி உடனடியாக அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. குறிப்பாக கொசு இனப்பெருக்கம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து சுத்தம் செய்தல், புகை மருந்து தெளித்தல் போன்ற நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியறுத்தப்பட்டுள்ளது.
