உத்தர பிரதேச மாநிலத்தில் டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, பல கோடி ரூபாய் பணம் பறித்து வந்த பல்லவி சிங் ராஜ்புட் என்ற இளம் பெண்ணை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த இவர், போலியான பெயர்களில் டேட்டிங் செயலிகளில் கணக்குகளைத் தொடங்கி, இளைஞர்களைக் கவர்ந்து இந்த நூதன மோசடியை செய்துள்ளார்.
டேட்டிங் செயலிகள் மூலம் அறிமுகமாகும் ஆண்களிடம் முதலில் ஆசையாகப் பேசி, பின்னர் அவர்களை நேரில் சந்திக்க அழைப்பார். நேரடி சந்திப்புகளின் போது அவர்களுடன் நெருக்கமாகப் பழகுவது போல நடித்து, அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தன் செல்போனில் பதிவு செய்து கொள்வார்.
பின்னர் அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டிப் பணம் பறிக்கத் தொடங்குவார்.
அவரது மிரட்டலுக்குப் பயந்த பலர் பணத்தைக் கொடுத்துள்ளனர். ஆனால், சில ஆண்கள் பணம் தர மறுத்த போது, அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பொய் புகார்களைக் கொடுத்துக் காவல்துறையில் சிக்க வைத்துள்ளார். இவ்வாறு இதுவரை 5 பேர் மீது இவர் பொய்ப் புகார் அளித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த மோசடி மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாயைக் கொண்டு பல்லவி ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், டேட்டிங் செயலிகள் மூலம் நடைபெறும் இந்தத் தொடர் மிரட்டல்கள் குறித்து வழக்கறிஞர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், பல்லவி சிங்கைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இதுவரை பல ஆண்களை ஏமாற்றி சுமார் 6 கோடி ரூபாய் வரை அவர் பறித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
