HomeTamilnadu3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: “தமிழகம் தலையிடக் கூடாது” - டி.கே. சிவக்குமார் அதிரடி

3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: “தமிழகம் தலையிடக் கூடாது” – டி.கே. சிவக்குமார் அதிரடி

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழகம் தலையிடக் கூடாது என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

3 தமிழர்கள் சுட்டுக்கொலை

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் ஆகஸ்ட் 15-ம் தேதி கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தமிழர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வேட்டையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததாகவும் கர்நாடக வனத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் முதலில் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதனால் வனத்துறையினர் தற்காப்புக்காக பதில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்குச் செல்லவில்லை என்றும், காணாமல் போன கால்நடைகளைத் தேடிச் சென்றதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் எதிர்ப்பு

3 தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழக சட்டசபையிலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. உயிரிழந்த 3 பேரின் மரணம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.

டி.கே. சிவக்குமார் பதில்

இந்த நிலையில், தமிழக தலைவர்கள் தெரிவித்த கண்டனங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பதிலளித்தார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியான பிரச்சினைகள் இருப்பதாகவும், ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

“அவர்கள் தங்கள் பணியைச் செய்யட்டும். நாங்கள் எங்கள் பணியைச் செய்வோம். அவர்களின் நிர்வாகத்தில் நான் தலையிட விரும்பவில்லை. கர்நாடகாவை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்” என தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் கர்நாடகம் தலையிடுவதில்லை என்றும், அதேபோல் கர்நாடகத்தின் சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவகாரங்களில் பிற மாநிலங்களும் தலையிடக் கூடாது என்றும் அவர் கூறினார்.

இரு மாநிலங்களுக்கு இடையே பரபரப்பு

3 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் கர்நாடகா-தமிழக எல்லைப் பகுதிகளில் அரசியல் ரீதியான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில், கர்நாடக தரப்பு தனது நிர்வாக வரம்புக்குள் விவகாரத்தை கையாள வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இதற்கிடையில், சென்னையில் நடைபெற உள்ள 31-வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்திலும் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகள், நீர்ப்பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments