அமெரிக்காவைச் சேர்ந்த Better Home & Finance நிறுவனத்தின் நிறுவனர் விஷால் கார்க், சிஇஓ பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் அந்தப் பொறுப்புக்கு வர முயற்சி மேற்கொண்டுள்ளார்.
900 ஊழியர்களை நீக்கிய சம்பவம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான விஷால் கார்க், Better Home & Finance நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற காணொலி அழைப்பில், நிறுவனத்தின் 900-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அவர் அறிவித்தார். இது ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு சில காலம் விலகியிருந்த அவர், 2022-ல் மீண்டும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு திரும்பினார்.
சிஇஓ பதவியில் இருந்து நீக்கம்
கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி நிறுவனத்தின் இயக்குநர் குழு அவரை சிஇஓ பதவியில் இருந்து நீக்கியது. அவருக்குப் பதிலாக டேனியல் லூயிஸ் இடைக்கால சிஇஓவாக நியமிக்கப்பட்டார். தன்னை பதவியில் இருந்து நீக்கியது சரியான முடிவு அல்ல என்று கார்க் எதிர்ப்பு தெரிவித்தார். மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்க விரும்புவதாகவும் கோரிக்கை வைத்தார். தனது நீக்கத்துக்குப் பின்னால் நிறுவனத்துக்குள் நடந்த அதிகாரப் போட்டியே காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நிறுவனம் மீண்டும் லாபகரமான நிலையை அடையும் வரை, ஆண்டுக்கு வெறும் 1 அமெரிக்க டாலர் சம்பளத்தில் சிஇஓவாக பணியாற்றத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். நிறுவனம் லாபத்திற்கு திரும்பிய பிறகு சிஇஓ பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை பங்குதாரர்களின் ஆதரவு
தனது முயற்சிக்கு நிறுவனத்தின் பெரும்பான்மை வாக்குரிமையைக் கொண்ட பங்குதாரர்களின் ஆதரவு இருப்பதாகவும் விஷால் கார்க் தெரிவித்துள்ளார். இதன் மூலம், மீண்டும் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டை பெறுவதற்கான முயற்சியை அவர் தீவிரப்படுத்தியுள்ளார்.
