மும்பை பவாய் பகுதியில் திருநங்கை போல வேடமிட்ட 28 வயது நபர் ஒருவர், வீட்டில் இருந்த விமான பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையின் பவாய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 25 வயதான விமான பணிப்பெண் ஒருவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, 28 வயது நபர் ஒருவர் திருநங்கை போல வேடமிட்டு அங்கு வந்துள்ளார். உடனே அப்பெண்ணிடம் உனது கணவருக்கு கெட்ட ஆவி பிடித்திருக்கிறது. அதனை தன்னால் விரட்ட முடியும் என்று தெரிவித்தார்.
கணவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அந்தப் பெண் அவரது பேச்சை நம்பி வீட்டுக்குள் அனுமதித்துள்ளார். பிறகு, அந்த நபர், அந்தப் பெண்ணின் மீது தண்ணீர் தெளித்துள்ளார். பின்னர் கண்களை மூடி படுக்கையில் படுக்குமாறு கூறி அவரை படுக்கையறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் கண்களை மூடி படுக்கையில் படுக்குமாறு கூறி அவரை படுக்கையறைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பெண் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். அவர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து, அப்பெண் போலீசில் புகார் அளித்தார். புகார் கிடைத்ததும் போலீசார் அந்த நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். குடியிருப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் குற்றம்சாட்டப்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் அனில் ஷிண்டே (28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் சிலர் திருநங்கை போல வேடமிட்டு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இதேபோன்று வேறு சம்பவங்களில் அவர் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டுக்குள் வர அனுமதிக்கும் போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, வீட்டுக்குள் வர விரும்பும் நபரின் அடையாளம் மற்றும் அவர் வந்ததற்கான காரணம் ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.
