கேமரா இல்லாத செல்போன்களை கோவிலுக்கு கொண்டு போகலாமா? – அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

தமிழகத்தில் முக்கியமான 52 பெரிய கோவில்களில் செல்போன் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடு செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

52 பெரிய கோவில்களில் புதிய நடைமுறை

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்களில் பக்தர்கள் செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. குறிப்பாக கோவில் வளாகத்தில் எடுக்கப்படும் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்படுவது தொடர்பாகவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் சென்றுள்ளன.

இதையடுத்து, முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 52 முக்கிய கோவில்களில் செல்போன் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கேமரா இல்லாத செல்போனுக்கு அனுமதி

கோவிலுக்குள் கேமரா வசதி கொண்ட செல்போன்களை கொண்டு செல்வதற்கே கட்டுப்பாடு என்றும் கேமரா இல்லாத சாதாரண செல்போன்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

செல்போன்களை வைக்க பாதுகாப்பு பெட்டகம்

செல்போன் தடையை அமல்படுத்தும் கோவில்களில் பக்தர்களின் வசதிக்காக செல்போன் பாதுகாப்பு பெட்டகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைத்து, தரிசனம் முடிந்த பிறகு அவற்றை பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெரிய கோவில்களில் ஒரே நேரத்தில் சுமார் 20 ஆயிரம் செல்போன்களை பாதுகாப்பாக வைக்கும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

52 கோவில்களில் புதிய நடைமுறை

சென்னையில் வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சாமி கோவில், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், திருவள்ளூர் வீரராகவர் கோவில், திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களிலும் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்றகோவில்களான திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், நெல்லையப்பர், சுசீந்திரம், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட 52 கோவில்களில் புதிய நடைமுறை தொடங்கியுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial