இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்தபடி GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சாதனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் GSLV-F17 ராக்கெட் இன்று, செப்டம்பர் 4-ம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
EOS-05 செயற்கைக்கோள் இந்திய துணைக்கண்டத்தை மையமாகக் கொண்டு செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல அலைநீளங்களைப் பதிவு செய்யக்கூடிய நவீன கேமரா தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் மோடி பெருமிதம்
GSLV-F17 ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவுதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
EOS-05 செயற்கைக்கோளை புவி-ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கு கொண்டு சென்றிருப்பது இந்திய விண்வெளித் துறையின் வளர்ந்து வரும் திறனையும் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரோ மற்றும் இந்திய தொழில்துறைக்கு இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்து வருவது நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு கூடுதல் வலிமையை அளிப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

