புதிய தலைமைச் செயலகம் எங்கே அமையும்? சென்னையில் 4 இடங்கள் தீவிர பரிசீலனை

சென்னையில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வரும் நிலையில், அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பட்டினப்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம், கோயம்பேடு ஆகிய 4 பகுதிகள் தற்போது பரிசீலனையில் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பட்டினப்பாக்கம்

பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25 ஏக்கர் நிலம் பரிசீலனையில் உள்ளது. சென்னையின் முக்கியப் பகுதிகளுக்கு அருகில் இருப்பது இந்த இடத்துக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், கடலோரப் பகுதி என்பதால் கட்டுமானத்துக்கான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய நிலை உள்ளது.

கிண்டி

கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 35 ஏக்கர் நிலம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் கணிசமான நிலப்பரப்பு இருப்பதால் இந்த பகுதியும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

சர்தார் படேல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள், ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் வசதிகள் உள்ளது. இருப்பினும் கிண்டி ஏற்கெனவே அதிக போக்குவரத்து கொண்ட பகுதியாக உள்ளது. இதனால் கூடுதல் போக்குவரத்து ஏற்படுமா என்பதும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

நந்தம்பாக்கம்

நந்தம்பாக்கத்தில் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. விமான நிலையத்துக்கு அருகில் அமைந்திருப்பதும், தெற்கு மற்றும் மேற்கு சென்னையில் இருந்து அணுகுவதற்கு வசதியாக இருப்பதும் இதன் சாதகங்களாக பார்க்கப்படுகின்றன.

கோயம்பேடு

கோயம்பேட்டில் உள்ள பழைய புறநகர் பேருந்து நிலையப் பகுதியில் சுமார் 36 ஏக்கர் நிலம் உள்ளது. பெரிய நிலப்பரப்பு, மெட்ரோ ரெயில் வசதி மற்றும் நகரின் பல பகுதிகளுடன் இருக்கும் சாலை இணைப்பு ஆகியவை இதன் முக்கிய சாதகங்களாக உள்ளன.

ஆனால் கோயம்பேடு ஏற்கெனவே சென்னையின் முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது. கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் வணிகப் பகுதிகள் காரணமாக இப்பகுதியில் தொடர்ந்து அதிக வாகனப் போக்குவரத்து காணப்படுகிறது. புதிய தலைமைச் செயலகம் இங்கு அமைந்தால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

எந்த இடம் இறுதியாக தேர்வு செய்யப்படும்?

தற்போதைய நிலையில் இந்த 4 இடங்களிலும் சாதகமான அம்சங்கள் இருந்தாலும் அதே நேரத்தில் சவால்களும் உள்ளது. இந்த 4 இடங்களைத் தவிர வேறு பகுதிகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial