கோவை துடியலூர் பகுதியில் சாலையோரம் இருந்த மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 16 வயது சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகே உள்ள அசோகபுரம் பகுதியில் பெட்டிக்கடை ஒன்று செயல்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் 2-ம் தேதி நள்ளிரவு அந்தக் கடைக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர்.
இதுகுறித்து சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அதே பகுதியில் நடைபெற்ற மற்றொரு அதிர்ச்சி சம்பவமும் கேமராவில் பதிவாகியிருப்பது தெரியவந்தது.
சாலையோரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் படுத்திருந்த நிலையில், அங்கு வந்த ஒரு சிறுவன் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டார். அந்த நேரத்தில் அங்கு இருந்த தெருநாய் அந்த நபரை நோக்கி குரைத்தபடி விரட்ட முயன்றது. நாய் துரத்தியதால் அந்த சிறுவன் அங்கிருந்த ஓடியுள்ளான். இந்த முழு சம்பவமும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து துடியலூர் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் துடியலூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

