2 நாட்களில் 217 ஊழியர்கள் பணியிடை நீக்கம் : டாஸ்மாக் கடைகளில் அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக பணம் வசூலிப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் 217 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக கடந்த ஆட்சிக் காலத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இதனை தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தின்போதும் விமர்சித்திருந்தார்.

ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற முறைகேடுகள் தடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்த நிலையில், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக் கடைகளில் கூடுதல் வசூலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷும் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கூடுதல் பணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது முதற்கட்டமாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். அதே தவறு மீண்டும் செய்தால் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பொதுமக்கள் தங்களது புகார்களை எளிதாக தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு தனிப்பட்ட புகார் சேவை மையத்தை தொடங்கியது. அந்த மையத்துக்கு கிடைத்த புகார்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, தொடர்ந்து கள ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.

அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை மற்றும் கள ஆய்வுகளின் அடிப்படையில் முதல் கட்டமாக 67 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக அடுத்த நாளில் மேலும் 150 ஊழியர்கள் மீது இதே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் 2 நாட்களில் மொத்தம் 217 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial