தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், தனது சகோதரரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த அவரது சகோதரர் வீட்டுக்குள் சென்று, கதவை உடைத்து தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணையில் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் மரிய வில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “அமைச்சர் என்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியுமா?” என்ற கேள்வியை எழுப்பியது. “சட்டத்திற்கு அனைவரும் சமம்” என்ற கருத்தையும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப் பிறகு புதுச்சேரி நீதிமன்றத்தில் மேரி வில்சன் நேரில் ஆஜராவார் என அவரது தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை தமிழக நிதியமைச்சர் மேரி வில்சன் புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதி சந்திரசேகர் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினமும் மேரி வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

