விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 ஆம் தேதி திங்கட்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என சென்னை மாவட்ட கலெக்டர் எஸ். மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் அல்லது தெர்மாகோல் போன்ற பொருட்கள் கலக்காத, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.
விநாயகர் சிலைகளின் ஆபரணங்களைத் தயாரிக்க உலர்ந்த மலர்கள், வைக்கோல் போன்ற இயற்கைப் பொருட்களை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாகக் காட்டுவதற்கும் மரங்களில் இருந்து கிடைக்கும் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம்.
சிலை மற்றும் பந்தல்களின் அலங்காரத்திலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தெர்மாகோலை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக வைக்கோல் போன்ற இயற்கைப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும்போது நச்சுத்தன்மை கொண்ட அல்லது எளிதில் மக்காத ரசாயன சாயங்கள் மற்றும் எண்ணெய் அடிப்படையிலான வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மேலும், எனாமல் மற்றும் செயற்கை சாயங்களை அடிப்படையாகக் கொண்ட வண்ணப்பூச்சுகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு மாற்றாக நீர் சார்ந்த, மக்கும் தன்மை கொண்ட மற்றும் நச்சுத்தன்மை இல்லாத இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலைகளை அலங்கரிக்கும்போதும் ரசாயனங்கள் கலந்த பொருட்களுக்கு பதிலாக இயற்கைப் பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல், ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பதால், அவற்றை மாசுபடாமல் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், சிலை கரைப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதுடன், மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் இடங்களில் மட்டுமே மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

