சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனையில் ரோபோடிக் அறுவைசிகிச்சை தொழில்நுட்பத்தின் உதவியுடன் 50 வயது பெண்ணின் மிகப்பெரிய தைராய்டு புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி மருத்துவத் துறையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த 50 வயது பெண்ணின் தைராய்டு சுரப்பியில் இருந்த மிகப்பெரிய புற்றுநோய்க் கட்டியை, தழும்பு ஏற்படாதவாறு ரோபோடிக் அறுவைசிகிச்சை மூலம் வடபழனி காவேரி மருத்துவமனை அகற்றியுள்ளது. இந்த சிக்கலான அறுவைசிகிச்சை அப்பெண்ணின் குரல்வளத்தை எவ்வித பாதிப்புமின்றி பாதுகாக்கும் குறிக்கோளை வெற்றிகரமாக சாத்தியமாக்கி உள்ளது.
இது குறித்து டாக்டர் சதீஷ் குமார் ஆனந்தன் கூறுகையில்,
“வழக்கமான முறையில் கழுத்தின் முன் பகுதியில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டி வரும். இதனால் பெரிய தழும்பு ஏற்படும். இதைத் தவிர்க்கவே, அக்குளில் சிறிய துளை போட்டு, சுரங்கம் போன்ற பாதையை உருவாக்கி கட்டியை அணுகினோம். ரோபோடிக் அமைப்பின் மேம்பட்ட பார்வை மற்றும் துல்லியத்தன்மை, கட்டியையும் குரலுக்குக் காரணமான நரம்பையும் தெளிவாக வேறுபடுத்திக் காண எங்களுக்கு உதவியது. நோயாளியின் குரல்வளத்தைப் பாதுகாத்து, புற்றுக் கட்டியையும் அதையொட்டியிருந்த தசையையும் முழுமையாகவும், வெற்றிகரமாகவும் நாங்கள் அகற்றினோம்” என்றார்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு, நோயாளி அடுத்த நாளே உணவருந்தவும் பேசவும் முடிந்தது இச்சிகிச்சையின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.
காவேரி மருத்துவமனைக் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில்,
“நவீன அறுவைசிகிச்சை தொழில்நுட்பத்தின் உண்மையான மதிப்பு நோயாளியின் சிகிச்சையிலும், குணமடைவதிலும் அது ஏற்படுத்தும் அர்த்தமுள்ள மாற்றத்தில்தான் உள்ளது. மேம்பட்ட ரோபோடிக் முறை மிகப்பெரிய மற்றும் சவாலான தைராய்டு புற்றுநோயை முழுமையாக அகற்ற உதவியதோடு, நோயாளியின் குரல்வளத்தைப் பாதுகாத்து அவர் விரைவாக குணமடையவும் உதவியிருக்கிறது.
இந்தத் தழும்பில்லா, குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை முறையானது, பாதுகாப்பான மற்றும் பலனளிக்கும் சிறந்த புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதை முதன்மை நோக்கமாக கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

