ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனைக்கு வந்த 33 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக்கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தி என மொத்தம் 20 பொருட்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம், நரசராவ்பேட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை நரசராவ்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றுக்குள் பேனாக்கள், மரக்கரண்டிகள் பொருட்கள் இருப்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்தனர். இதையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின்போது பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரத்தால் செய்யப்பட்ட கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தி என மொத்தம் 20 பொருட்கள் அகற்றப்பட்டன.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு அல்லாத பொருட்களை உண்ண வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தும் ‘பைகா சிண்ட்ரோம்’ எனப்படும் மனநல பாதிப்பு காரணமாக இந்தப் பொருட்களை பெண் விழுங்கியிருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

