உத்தரப் பிரதேச மாநிலம் சஹரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் பணக்கருவூலத்தில் ரூ.17.29 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், வங்கி மேலாளர் அமித் குமாரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், சஹரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் பணக்கருவூலத்தில் கள்ளநோட்டுகள் இருப்பதாக ஆகஸ்ட் 29, 2026 அன்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் ரூ.17.29 கோடி முகமதிப்பு கொண்ட கள்ள இந்திய ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சதர் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சஹரன்பூர் வங்கியிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஜெய்ப்பூர் பணக்கருவூலத்துக்கு அனுப்பப்பட்ட பணத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகம் ஏற்பட்டதாக விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் கண்டறியப்பட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.7.40 கோடியாக இருந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் அந்தத் தொகை சுமார் ரூ.17 கோடியாக அதிகரித்து, இறுதியில் ரூ.17.29 கோடி என கணக்கிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புலனாய்வுக் குழு அதிகாரிகள் மூன்று வங்கியின் மேலாளர்களின் இல்லங்களில் சோதனை நடத்தி, மின்னணு சாதனங்களையும் ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த வழக்கில் பி.என்.பி வங்கியின் ஜகத்ரி கிளை மேலாளரான அமித் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சிரேஷ்ட கோட்ட மேலாளர் ரவி குமார் கான்சே மற்றும் சோபியா மார்க்கெட் பணப் பெட்டக மேலாளர் சுஷில் குமார் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கள்ளநோட்டுகள் வங்கியின் பணக்கருவூலத்திலிருந்து கிளைகள் அல்லது ஏ.டி.எம்.களுக்கு சென்றுள்ளனவா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

