சென்னையில் தமிழக அரசின் புதிய தலைமைச்செயலகம் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று (செப்டம்பர் 9, 2026) வெளியிட்டுள்ளது.
அதன்படி, பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலத்தில் புதிய தலைமைச்செயலக வளாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் இந்த வளாகம் அமைக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை மற்றும் பல்வேறு அரசு துறைகளை ஒருங்கிணைந்த வளாகத்தில் கொண்டு வரப்பட உள்ளது.
மொத்தம் 21.37 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நிலம் பொதுத்துறை பயன்பாட்டுக்காக வழங்கப்பட உள்ளது. அந்த பகுதியில் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சதுர அடிக்கு சுமார் ரூ.22 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.2,047 கோடியாக மதிப்பிடப்படுகிறது.
புதிய தலைமைச்செயலக வளாகத்தை சுமார் ரூ.1,200 கோடி செலவில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப நவீன உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக வசதிகளுடன் வளாகத்தை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சட்டப்பேரவை செயல்பாடுகள், தலைமைச்செயலக பணிகள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்களை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்துவதற்கான வசதிகள் இங்கு இடம்பெற உள்ளன. இதன் மூலம் அரசு நிர்வாகத்தில் ஒருங்கிணைப்பு அதிகரிப்பதுடன், பல்வேறு துறைகளுக்கு இடையேயான பணிகளை ஒரே வளாகத்தில் இருந்து மேற்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


