தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இடைத்தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் தி.மு.க. சார்பில் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமாரவேல் போட்டியிடுகிறார். தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா களமிறங்குகிறார்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.

