வங்கி ஊழியர் சங்கங்கள் நாளை (செப்டம்பர் 11) வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த சூழலில் வாடிக்கையாளர்கள் முக்கியமான வங்கி பணிகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு பாரத ஸ்டேட் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாற்று வங்கி சேவைகளை பயன்படுத்துமாறும் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) சார்பில் செப்டம்பர் 11-ம் தேதி நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வங்கிகளின் வழக்கமான பணிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் வங்கியின் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. செப்டம்பர் 11-ம் தேதி கிளைக்கு நேரடியாகச் சென்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் இருந்தால், அவற்றை அதற்கு முன்பே முடித்துக்கொள்ளுமாறு SBI வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக பணம் தொடர்பான தேவைகளுக்கு ஏடிஎம் மற்றும் தானியங்கி பணம் செலுத்தும், பணம் எடுக்கும் இயந்திரங்களை பயன்படுத்தலாம். வங்கி ஊழியர்களின் நேரடி உதவி தேவைப்படாத வழக்கமான சேவைகளுக்கு வாடிக்கையாளர் சேவை மையங்களையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், யுபிஐ போன்ற மின்னணு வழிகளை பயன்படுத்துமாறு SBI தெரிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தம் நாளை ஒரு நாள் மட்டும் அல்ல. செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும் வேலைநிறுத்தம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 26, 2026 முதல் தொடர் வேலைநிறுத்தம் நடத்துவதற்கும் UFBU சார்பில் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

