விமானப் பயணங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்தியாவில் பணியாற்றும் அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனையை கட்டாயமாக்க டி.ஜி.சி.ஏ. உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஏர் இந்தியா விமானத்தில் பணியாற்றிய விமானி ஒருவர் விமானப் பயணத்தின்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாய்லாந்தில் இருந்து டெல்லி நோக்கி வந்த அந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் போதைப்பொருள் பயன்படுத்தியது பின்னர் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, விமானிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை நடத்த விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டி.ஜி.சி.ஏ. உத்தரவிட்டுள்ளது. இந்திய விமானங்களில் பணியாற்றும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து விமானிகளும் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இந்த பரிசோதனை நடைமுறையை 2027-ம் ஆண்டு ஜூலைக்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமானிகள் பணியின்போது போதைப்பொருள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், விமானப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார்.

