நடிகர் விமல் தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா’ திரைப்படத்தின் தயாரிப்புக்காக, பைனான்சியர் கோபியிடம் இருந்து ரூ.4 கோடியே 50 லட்சம் கடன் பெற்றுள்ளார். கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக விமல் வழங்கிய காசோலை போதிய பணம் இல்லாததால் திரும்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் விமலுக்கு எதிராக நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜூலை 23, 2026 அன்று நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், காசோலை தொடர்பான தொகையை பைனான்சியர் கோபிக்கு திருப்பிச் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ரூ.10 லட்சத்தை 60 நாட்களுக்குள் விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து விமல் தரப்பில் சென்னை மாவட்ட 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

