புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் பேராசிரியருமான சாலமன் பாப்பையா, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 11, 2026 அன்று காலமானார். அவருக்கு வயது 90.
சாலமன் பாப்பையா 1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் பிறந்தார். மதுரை ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைப் பள்ளி ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். பின்னர் தல்லாகுளம் அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். படிப்பை முடித்த பிறகு அமெரிக்கன் கல்லூரியில் பயிற்றுநராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் தமிழ்ப் பேராசிரியராக உயர்ந்து, தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பள்ளிப் பருவத்திலேயே பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆரம்பத்தில் பட்டிமன்றப் பேச்சாளராக இருப்பதிலேயே ஆர்வம் கொண்டிருந்த அவர், பின்னாளில் நடுவராகவே தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். தொலைக்காட்சி வளர்ச்சியடைந்த காலத்தில் அவரது பட்டிமன்றங்கள் வீடுகளுக்குள் சென்றன. குறிப்பாக பொங்கல், புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அவரது பட்டிமன்ற நிகழ்ச்சிகள் பல குடும்பங்களால் கொண்டாடப்பட்டது.
பல்வேறு பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் இரு அணிகளின் கருத்துகளிலும் உள்ள உண்மைகளை எடுத்துக்காட்டி, நகைச்சுவையுடன் தீர்ப்பை வழங்கிய அவரது பாணி தனித்துவமானதாகப் பார்க்கப்பட்டது. சாலமன் பாப்பையாவின் பேச்சில் மதுரைத் தமிழின் இயல்பும் நகைச்சுவையும் இணைந்திருந்தன.
பட்டிமன்றங்களைத் தாண்டியும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சென்றார். திருக்குறள் மட்டுமின்றி நாலடியார், நான்மணிக்கடிகை, அறநெறிச்சாரம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, திரிகடுகம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.
பட்டிமன்ற நடுவராக மட்டுமே அறியப்பட்ட சாலமன் பாப்பையா, இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்திலும், ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ படத்திலும் அவர் நடித்தார். ‘சிவாஜி’ படத்துக்குப் பிறகு அவருக்கு 200-க்கும் மேற்பட்ட திரைப்பட வாய்ப்புகள் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலான வாய்ப்புகளை அவர் ஏற்கவில்லை. சினிமாவில் தொடர்ந்து நடிப்பதைவிட, தமிழ் பேராசிரியர் மற்றும் பட்டிமன்ற நடுவர் என்ற தனது அடையாளத்திலேயே தொடர அவர் விரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது அவருக்கு 2000ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2010ஆம் ஆண்டு அவருக்கு முத்தமிழ் பேரறிஞர் விருது வழங்கி சிறப்பித்தது. இந்திய அரசால் 2021ஆம் ஆண்டு சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இலக்கியம் மற்றும் கல்வி–பத்திரிகைத் துறையில் அவரது பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
அவரது கடைசி பட்டிமன்றம் செப்டம்பர் 5, 2026 அன்று சிவகாசியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தியது. பண்டிகை நாட்களில் தொலைக்காட்சி வழியாக வீடுதோறும் ஒலித்த அவரது குரலும், எளிமையான நகைச்சுவையுடன் தமிழ் இலக்கியத்தை எடுத்துச் சொன்ன அவரது பாணியும், பல தலைமுறைகளின் நினைவில் நீடிக்கும் வகையில் அமைந்துள்ளன.

