தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மதுராந்தகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்யபாமாவும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், சொந்த அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால், பொதுமக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய உள்ளது. இந்த செலவுகளுக்கு அவர்களை பொறுப்பாக்கும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்.
அரசியல் காரணங்களுக்காக மக்கள் தீர்ப்பை புறக்கணித்து பதவி விலகுபவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதிக்கு வழக்கறிஞர் ஐ. பரந்தாமனும், தாராபுரம் தொகுதிக்கு வழக்கறிஞர் எஸ். சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் கே. பானுமதியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் போட்டியிடுவார்கள் என்று கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளதால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுமா? என கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

