2026-ம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14, திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீட்டில் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கான நேரம், பூஜை நடைமுறை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
விநாயகர் சதுர்த்தி, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படும் முக்கியமான இந்து பண்டிகையாகும். 2026-ல் இது செப்டம்பர் 14, திங்கட்கிழமை வருகிறது. இந்த ஆண்டுக்கான சதுர்த்தி திதி செப்டம்பர் 14 காலை 7.06 மணிக்குத் தொடங்கி, செப்டம்பர் 15 காலை 7.44 மணி வரை நீடிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விநாயகர் தடைகளை நீக்கி ஞானம், வெற்றி மற்றும் வளத்தை அருளுபவர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இந்த நாளில் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.
பூஜைக்கு உகந்த நேரம் எது?
2026 விநாயகர் சதுர்த்தி நாளில் வீட்டில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ள உகந்த நேரமாக காலை 11.02 மணி முதல் மதியம் 1.31 மணி வரை குறிப்பிடப்பட்டுள்ளது. விநாயகர் அவதரித்ததாகக் கருதப்படும் மத்தியான வேளையில் பூஜை செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
மற்றொரு வழிகாட்டுதலில், அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 1 மணி வரையும், 1 மணி முதல் 2 மணி வரையும் வழிபாடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் பூஜை செய்வது எப்படி?
விநாயகர் சதுர்த்தி அன்று காலையில் எழுந்து நீராடி, பூஜையறையைச் சுத்தம் செய்து வழிபாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்.
மரப்பலகையில் கோலமிட்டு, அதன் மீது தலைவாழை இலையை விரித்து, பச்சரிசியைப் பரப்பி, நடுவில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைக்கலாம். பின்னர் சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றால் அலங்கரித்து பூஜையைத் தொடங்கலாம். இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது பாரம்பரிய வழிபாட்டுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவும்.
தடைகளை நீக்கி வெற்றியை தரும் விநாயகர் மந்திரம்
ஓம் நமோ கணபதயே நமஹ கணபதிர் விக்னராஜோ லம்பதுண்டோ கஜானன: த்வைமாதுரஸ்ச ஹேரம்ப ஏகதந்தோ கணாதிப: விநாயகஸ்சாருகர்ண: பஸூபாலோ பவாத்மஜ:
விநாயகர் சதுர்த்தி நாளில், அருகம்புல் மாலை சாற்றி, இந்த மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபட்டால் காரிய வெற்றியும், எல்லா வளங்களும் பெறலாம்.

