முதல்வர் விஜய் துறையில் ரூ.45 லட்சம் டெண்டர் முறைகேடு? : ஆதாரத்தை வெளியிட்ட அறப்போர் இயக்கம்

தமிழகத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதாக உறுதியளித்து ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள புதிய தவெக அரசின் கீழ், முதலமைச்சர் விஜய் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையிலேயே மிகப்பெரிய டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

முறைகேடு எப்படி நடந்தது? அறப்போர் இயக்கம் அம்பலம்!

பெருங்களத்தூர் மேம்பாலம் அருகே அசோக தூண் சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்கான டெண்டர் ஆகஸ்ட் 6-ஆம் தேதிதான் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், அந்த அசோக தூண் சிலை ஜூலை 29-ஆம் தேதியே திறக்கப்பட்டுவிட்டது.

இந்த விழாவில் அமைச்சர் சரத்குமார் மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐ.ஏ.எஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தனர். இதற்கான வீடியோ ஆதாரங்களை அமைச்சரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதை அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பணியின் மதிப்பு ரூ.27.30 லட்சம் ஆகும்.

இரண்டாவது புகார்

சிட்லபாக்கம் ஏரி அருகே ‘Save Water’ என்ற குடிநீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைக்க ரூ.18.60 லட்சம் மதிப்பிலான டெண்டர் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், இந்தச் சிலை ஆகஸ்ட் 10-ஆம் தேதியே அவசர அவசரமாகத் திறக்கப்பட்டு, அதன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன.

டெண்டர் நடைமுறைகள் முடிந்து ஒப்பந்ததாரர் முறைப்படி தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவும் நடத்தப்பட்டிருப்பது, அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கும் இடையேயான சட்டவிரோதக் கூட்டுச் சதியைத் தெளிவாகக் காட்டுகிறது என அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

டெண்டர்கள் குறித்த அதிர்ச்சித் தகவல்

கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்குக் கோரிக்கை

சிலை அமைக்கும் பணிகள் அவசரப் பணிகளாகக் கருதப்பட முடியாத சூழலில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ், அமைச்சர் சரத்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஆகியோருக்கு ஆதாரங்களுடன் கூடிய விரிவான புகார் மனுவை அறப்போர் இயக்கம் அனுப்பியுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial