முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த சோதனை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே பி.டி. அரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையின் அடுத்த கட்டமாக முன்னாள் அமைச்சருடன் தொடர்புடைய இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
தனியார் பள்ளி அனுமதி தொடர்பான புகார் என்ன?
தனியார் பள்ளிகளுக்கான அரசு அங்கீகாரம் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டதாக விசாரணை அமைப்பு தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சென்னை அலுவலகத்திலும் சோதனை முயற்சி
சென்னை தியாகராய நகரில் உள்ள அன்பில் மகேஷ்க்கு தொடர்புடைய அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தச் சென்றனர். அங்கு அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால், போலீசார் அங்கு காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.
திமுக குற்றச்சாட்டு
மத்திய குற்றப்பிரிவு சோதனைக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள், பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம், சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாக சோதனை நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

