இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் என்பது நமது அன்றாட வாழ்வின் இன்றியமையாத அங்கமாகிவிட்டது. அவசரமாக வெளியே செல்லும்போது அல்லது முக்கியமான வேலையில் இருக்கும்போது, போனை சார்ஜரில் போட்டால் அது மிகவும் மெதுவாக ஏறும். இது பலருக்கும் பெரும் எரிச்சலை ஏற்படுத்தும்.
ஒரு மணி நேரம் சார்ஜ் போட்ட பிறகும் 10 அல்லது 20 சதவீதம் மட்டுமே சார்ஜ் ஏறியிருக்கும். உடனே போனில் பேட்டரி பாழாகிவிட்டது என்று பயப்பட வேண்டியதில்லை. ஸ்மார்ட்போன் மெதுவாக சார்ஜ் ஆவதற்கான முதன்மை காரணங்கள் மற்றும் அவற்றை வீட்டிலேயே சரிசெய்வதற்கான முழுமையான வழிகாட்டி இதோ.
சார்ஜர் மற்றும் கேபிள்
மெதுவான சார்ஜிங் பிரச்சனைக்கு 80% காரணம் நாம் பயன்படுத்தும் சார்ஜர் மற்றும் கேபிள் தான். கேபிள்கள் வெளிப்புறத்தில் நன்றாகத் தெரிந்தாலும், உட்புறத்தில் உள்ள வயர்கள் வளைந்து அல்லது அறுந்து போயிருக்கலாம். கேபிளின் முனைகளில் பிளாஸ்டிக் உருகி உள்ளதா அல்லது தளர்வாக உள்ளதா எனச் சரிபார்க்கவும்.
உங்கள் போன் 33W அல்லது 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் திறன் கொண்டது என்றால், அதற்கு ஏற்ற அடாப்டரையே பயன்படுத்த வேண்டும். குறைந்த திறன் கொண்ட பழைய அடாப்டர்களைப் பயன்படுத்தும்போது சார்ஜிங் வேகம் குறையும். தரமற்ற, மலிவு விலை கேபிள்கள் மற்றும் சார்ஜர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது சார்ஜிங் வேகத்தைக் குறைப்பதுடன் பேட்டரிக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
சார்ஜிங் போர்ட்டிற்குள் தூசிகள்
நாம் போனை பாக்கெட்டிலும் பையிலும் வைக்கும்போது, சார்ஜிங் போர்ட்டிற்குள் தூசிகள், பஞ்சு மற்றும் அழுக்குகள் போய் அடைந்து கொள்ளும். இதனால் சார்ஜிங் பின் சரியாக உள்ளே செல்லாமல், சார்ஜ் ஏறுவதில் சிக்கல் ஏற்படும்.
நல்ல வெளிச்சத்தில் உங்கள் போனின் சார்ஜிங் போர்ட்டை கவனித்து பாருங்கள். தூசி இருந்தால் மரத்தாலான அல்லது மென்மையான பிளாஸ்டிக் கருவியைக் கொண்டு உள்ளே இருக்கும் தூசிகளை மெதுவாக அகற்றுங்கள். ஊசி, கிளிப் போன்ற உலோகப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.
லேப்டாப்பின் USB போர்ட்கள்
உங்கள் போனை கணினி அல்லது லேப்டாப்பின் USB போர்ட்கள் சார்ஜ் போடக்கூடாது. அவற்றில் குறைந்த அளவே மின்சாரம் வெளிப்படும் என்பதால் சார்ஜிங் வேகம் மிக மெதுவாகவே இருக்கும். அதே போல எக்ஸ்டென்ஷன் போர்டுகளைத் தவிர்க்க வேண்டும். நேரடியாகச் சுவரில் உள்ள சாக்கெட்டில் அடாப்டரை மாட்டி சார்ஜ் செய்வதே சிறந்தது.
சார்ஜ் ஏறும் போது செய்யக்கூடாதவை
போன் சார்ஜ் ஆகும் போது கேம் விளையாடுவது, வீடியோக்களைப் பார்ப்பது அல்லது GPS பயன்படுத்துவது சார்ஜிங் வேகத்தை கடுமையாகப் பாதிக்கும். பேட்டரிக்குச் செல்லும் மின்சாரத்தின் அளவு குறையும். போனை சார்ஜ் செய்யும்போது தடிமனான பின்புற கவர்களை கழற்றி வைப்பது நல்லது. இது வெப்பம் வெளியேற உதவும். நேரடி வெயில் படும் இடங்களிலோ அல்லது மெத்தை, தலையணைக்கு அடியிலோ போனை வைத்து சார்ஜ் செய்யக்கூடாது.
பேட்டரியின் திறன் மிகக் குறைவாக இருந்தால், புதிய பேட்டரியை மாற்றுவது ஒன்றே தீர்வாகும். போன் வீங்குவது போலத் தெரிந்தாலோ அல்லது எரியும் வாசனை வந்தாலோ உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தை அணுக வேண்டும்.

