இந்தியாவில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வந்த வழக்கில், சுமார் 5,13,847 போலி ஜிமெயில் ஐடிகள் மற்றும் கடவுச்சொற்களைக் கொண்ட பிரம்மாண்ட நெட்வொர்க்கை குஜராத் மாநில சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாகப் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவு பெரிய அளவில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு, பாதுகாப்பு வழிமுறைகள் மீறப்பட்டது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் நேரடியாக விசாரணை நடத்த குஜராத் காவல்துறை முடிவெடுத்துள்ளது.
கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி, புதுடெல்லியில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ (BRICS) உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, குஜராத் மாநில அரசுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், குஜராத் முதல்வர் அலுவலகம், சட்டப்பேரவை, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும், மாநாட்டில் பங்கேற்பவர்களையும் குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இது குறித்து காவல்துறை நடத்திய தீவிர சோதனையில் அது போலி மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த மின்னஞ்சலை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். இதையடுத்து, பீகாரின் பகல்பூரைச் சேர்ந்த ரோஷன் குமார் மற்றும் ஜார்க்கண்டின் தியோகரைச் சேர்ந்த குல்ஷன் குமார் ஆகிய இருவரைக் கைது செய்தது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5,13,847 போலியான ஜிமெயில் முகவரிகள் மற்றும் அவற்றின் கடவுச்சொற்கள் அடங்கிய பெரிய தரவுத்தளத்தை போலீசார் கைப்பற்றினர். 2022-ஆம் ஆண்டு முதலே இந்த நெட்வொர்க் இயங்கி வந்துள்ளது.
இந்தக் கணக்குகள் அனைத்தும் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்புவதற்கும், பிற சட்டவிரோத இணையக் குற்ற நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த கும்பலுக்குச் சர்வதேச அளவில் தொடர்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.
கூகுளின் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றி, இவ்வளவு பெரிய அளவில் தானியங்கி முறையில் போலி கணக்குகளை உருவாக்க முடிந்தது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூகுள் நிறுவனத்திற்குப் புகார் கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 5 லட்சம் போலி ஜிமெயில் விவகாரம் கூகுள் நிறுவனத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

