காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு: அரசியல் பயணம் ஒரு பார்வை

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான இ.எம். சுதர்சன நாச்சியப்பன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (செப்டம்பர் 17) காலமானார். அவருக்கு வயது 79 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த அவர், தனது இல்லத்தில் உயிரிழந்தார்.

காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

வழக்கறிஞராக தொடங்கிய பயணம்

சிவகங்கை மாவட்டத்தின் ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், எம்.ஏ., பி.எல். படித்துவிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

1969ஆம் ஆண்டு இந்திரா காங்கிரஸில் இணைந்தார். அதன்பின்னர் 1972ஆம் ஆண்டு சிங்கம்புணரி வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், பின்னர் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். 1975ஆம் ஆண்டு மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பணியாற்றினார்.

1980 முதல் 1990 வரை இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக இருந்தார். 1983ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் பொறுப்பு தலைவராகவும், 1988ஆம் ஆண்டு சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்தார்.

சிவகங்கை மக்களவை உறுப்பினர்

1999ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சுதர்சன நாச்சியப்பன் வெற்றி பெற்றார். 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறைத் தலைவராகவும், 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 2003ஆம் ஆண்டு நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும் இருந்தார்.

2004ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராகப் பொறுப்பு வகித்தார். அதே ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

மத்திய இணை அமைச்சராக பொறுப்பு

மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த சுதர்சன நாச்சியப்பன், பின்னர் மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றார். மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக 2013-14 காலகட்டத்தில் பணியாற்றினார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial