மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகக் கூறி இளைஞர் சேனா அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தெருநாய்கள் பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தெருநாய்கள் தொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இளைஞர் சேனாவின் நாசிக் மாவட்டத் தலைவர் விக்ரம் ரந்தாவே தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் ஒரு பகுதியாக நாய்க்குட்டிகளை சிறிய சாக்குகளில் வைத்து நகர பஞ்சாயத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவை அதிகாரியின் மேசையில் விடப்பட்டன. அலுவலகத்துக்குள் நாய்கள் விடப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நிபாட் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதனால் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறினர். மேலும், நாய்கள் கூட்டமாகச் சுற்றித் திரிவதால் தாக்குதல் மற்றும் சாலை விபத்துகளுக்கான அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
தெருநாய் பிரச்சனைக்கு தீர்வு காண உடனடியாக கருத்தடை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இளைஞர் சேனா வலியுறுத்தியுள்ளது. அதேபோல், நாய்களைப் பிடிக்கும் குழுக்களை அமைத்து, தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்துக்குப் பிறகு தலைமை அதிகாரி தீரஜ் பாம்ரே, தெருநாய்கள் தொடர்பான பிரச்சனையை உடனடியாக ஆய்வு செய்வதாக போராட்டக்காரர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. நிபாட் நகர பஞ்சாயத்து ஏற்கனவே தெருநாய்களுக்கான கருத்தடை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாகவும், நகரில் அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு

