மத்திய திரைப்படத் தணிக்கை வாரியமான (CBFC) புதிய 18 உறுப்பினர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில் நடிகர்கள், திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர் என திரைத்துறை சார்ந்தவர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
புதிய CBFC வாரியத்தில் இடம்பெற்றவர்கள்
18 பேர் கொண்ட குழுவில் பங்கஜ் திரிபாதி, பிரீத்தி ஜிந்தா, சுனில் ஷெட்டி, மனோஜ் ஜோஷி மற்றும் புரோசென்ஜித் சட்டர்ஜி ஆகிய நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். நடிகையும் அரசியல்வாதியுமான ரூபா கங்குலியின் பெயரும் புதிய குழு தொடர்பான வெளியான பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இவர்களுடன் இயக்குநர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், வினோத் அனுபம், அபிஷேக் ஜெயின், ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், சுப்ரியா யர்லகட்டா, யதீந்திர மிஸ்ரா, நீலா மாதவ் பாண்டா, நிஷிகந்தா வாட், வாமன் கேந்திரே மற்றும் ரமேஷ் படாங்கே உள்ளிட்டோரும் குழுவில் உள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுசீரமைப்பு
CBFC வாரியம் வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுசீரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய வாரியம் 2017-ஆம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்ட பின்னர், புதிய குழு அமைப்பதில் நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது. 2017-ல் அமைக்கப்பட்ட முந்தைய குழுவில் 12 உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.
திரைப்பட சான்றிதழ் தொடர்பான விவாதங்கள்
திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்குவது, திருத்தங்கள் கோருவது உள்ளிட்ட விவகாரங்களில் CBFC-யின் செயல்பாடு கடந்த காலங்களில் விவாதத்துக்குள்ளாகியுள்ளது. இதுபோன்ற சூழலில் புதிய 18 உறுப்பினர் குழு பொறுப்பேற்றுள்ளது.

