கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வி.எஸ்.பாபுவை எதிர்த்து முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். இந்த தேர்தல் முடிவில் வி.எஸ்.பாபு சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மூச்சுத்திணறல் காரணமாக செப்டம்பர் 9-ஆம் தேதி சென்னையில் உள்ள அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. செப்டம்பர் 18-ஆம் தேதி வெளியிடப்பட்ட மருத்துவமனை அறிக்கையில், வி.எஸ். பாபு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வயது மூப்பு காரணமாக சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

