நோயாளிகளுக்கு மருந்து கொடுத்த மருத்துவரின் ஓட்டுநர்.. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காஷிராம் அரசு மருத்துவமனையில், டாக்டர் இல்லாத நேரத்தில் அவரது டிரைவர் நோயாளிகளை கவனித்து மருந்துகளை வழங்கியதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்தக் வீடியோவில் ஒருவர் மருத்துவமனையின் நோயாளிகளிடம் பேசுவதும், அவர்களுக்கு மருந்துகளை எழுதிக் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

தேவ் பிரதாப் என்ற அந்த நபர், மருத்துவர் ராம்கேஷின் ஓட்டுநர் என தெரியவந்துள்ளது. டாக்டர் இல்லாத நேரத்தில் அவரது அறையில் டிரைவர் இருந்ததாகவும், அங்கு வந்த நோயாளிகளிடம் அவர் மருத்துவம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மருத்துவமனை நிர்வாகம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்த டிரைவர் இதற்கு முன்பும் மருத்துவர் இல்லாத நேரங்களில் நோயாளிகளுக்கு மருந்து வழங்கியுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. அவர் எத்தனை நோயாளிகளை கவனித்தார், மருத்துவ அறைக்குள் அவருக்கு எப்படி அனுமதி கிடைத்தது என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் ராம்கேஷிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், மருத்துவர் ராம்கேஷ், இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், டிரைவர் நோயாளிகளுக்கு என்ன மருந்து கொடுத்தார் என்பதும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial