செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் வேகத்தை குறைக்க வேண்டும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாரியோ அமோடெய் வலியுறுத்திய சில நாட்களிலேயே, அதே நிறுவனம் OpenAI-க்கு போட்டியாக புதிய AI மாடலை வெளியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
OpenAI சமீபத்தில் GPT-6 Astra என்ற புதிய AI மாடலை வெளியிட்டுள்ளது. கணினி பயன்பாடு, மென்பொருள் உருவாக்கம், இணையப் பாதுகாப்பு மற்றும் தொழில்முறை பணிகள் உள்ளிட்ட துறைகளில் அதன் திறன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.
இந்த மாடல் நிறுவனங்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. OpenAI-ன் வளர்ந்து வரும் நிலையில், அதற்கு போட்டியாக புதிய AI மாடலை வெளியிடலாமா என்பது குறித்து ஆந்த்ரோபிக் நிறுவனம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாரியோ அமோடெய் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி வெளியிட்ட விரிவான கட்டுரையில், AI மாடல்களின் திறன்களை மேம்படுத்தும் வேகத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுபோன்ற வளர்ச்சி போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் தொடர்ந்தால், பல சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த சூழலில், ஆந்த்ரோபிக் அடுத்த AI மாடலை வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது. அதன் பாதுகாப்பு அம்சங்களையும் மதிப்பீடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய மாடலை உருவாக்குவதற்கான முதலீடு மற்றும் நிறுவனத்தின் லாபத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடையெப்ற்று வருகிறது.

