பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங், கடந்த செப்டம்பர் 18ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமிர்தசரஸ் நகரில் உள்ள பக்தன்வாலா தானா மண்டி பகுதியில், ஹர்ஜித் சிங் ரோந்து பணியில் இருந்துள்ளார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஹர்ஜித் சிங் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், செப்டம்பர் 19-ம் தேதி இரவு சுமார் 9.45 மணியளவில் அமிர்தசரஸில் ஒரு சோதனைச் சாவடியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஸ்கூட்டரில் வந்த இருவரை போலீசார் நிறுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர்கள் போலீசாரை துப்பாக்கியால் சுட்டதாகவும், தொடர்ந்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் தீபக் சிங் என்ற நபர் உயிரிழந்தார். தீபக் சிங்குடன் இருந்த மற்றொரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளார். அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீசாரால் சுட்டுக்கொள்ளப்பட்ட தீபக் சிங் ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான வழக்கில் சிறையில் இருந்ததாகவும், ஏப்ரல் மாதம் அவர் வெளியே வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

