பல ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், திரைப்படங்களுக்கான தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
போதைப்பொருள், மது மற்றும் புகையிலை பயன்பாடு முதல் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மதம், இனம், வன்முறை மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான காட்சிகள் வரை பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
போதைப்பொருள் காட்சிகளுக்கு எச்சரிக்கை வாசகம்
திரைப்படத்தில் சட்டவிரோத போதைப்பொருட்களின் பயன்பாடு அல்லது கடத்தல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றால், அதனுடன் பார்வையாளர்களை எச்சரிக்கும் வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத போதைப்பொருட்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், சிறைத்தண்டனை உள்ளிட்ட சட்டரீதியான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கை இடம்பெற வேண்டும்.
மது, போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பழக்கங்களை ஊக்கப்படுத்தும் வகையிலான காட்சிகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதத்தை இழிவுபடுத்தும் காட்சிகளுக்கு கட்டுப்பாடு
இனம், மதம் அல்லது குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் மற்றும் வசனங்களுக்கும் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட குழுவினரை அவமதிக்கும் அல்லது வெறுப்பை ஏற்படுத்தும் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறாததை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் தொடர்பான காட்சிகளிலும் கட்டுப்பாடு
திரைப்படங்களில் குழந்தைகள் வன்முறையால் பாதிக்கப்படுபவர்களாகவோ, வன்முறையில் ஈடுபடுபவர்களாகவோ அல்லது வன்முறையை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்களாகவோ சித்தரிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், குழந்தைகள் எந்த வகையான துன்புறுத்தலுக்கும் ஆளாவதை வெளிப்படுத்தும் காட்சிகளையும் தவிர்க்க வேண்டும் என வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யக்கூடாது
உடல் அல்லது மனநலக் குறைபாடு உள்ளவர்களை துன்புறுத்துவது அல்லது கேலி செய்வது போன்ற காட்சிகள் மற்றும் வசனங்களுக்கும் திரைப்படங்களில் சித்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியலுக்கு எதிரான கருத்துகளுக்கும் கட்டுப்பாடு
அறிவியல் அடிப்படைகளுக்கு எதிரான கருத்துகளை ஊக்குவிக்கும் வகையிலான காட்சிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களில் இடம்பெற்றுள்ளன. அதே போல, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய வகையிலான காட்சிகளும் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்புகளுக்கும் புதிய விதி
திரைப்படத்தின் தலைப்பை தேர்வு செய்வதிலும் தயாரிப்பாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆத்திரத்தைத் தூண்டும் வகையிலோ, ஆபாசமானதாகவோ, புண்படுத்தும் வகையிலோ அல்லது தணிக்கை விதிகளை மீறும் வகையிலோ தலைப்புகள் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சென்சார் போர்டில் புதிய மாற்றம்: 18 உறுப்பினர்கள் புதிதாக நியமனம்

