இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தை 4 மாநிலங்களாகப் பிரிப்பது குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. சாதி கணக்கெடுப்பிற்குப் பிறகு மாநிலம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செப்டம்பர் 20-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்பர், பிரதமர் நரேந்திர மோடியுடன் இதுகுறித்து பேசியதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பிறகு மாநிலத்தைப் பிரிப்பதில் சிக்கல் இருக்காது என பிரதமர் தமக்கு கூறியதாகவும் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மிகப்பெரிய மாநிலமாக இருப்பதால் நிர்வாக வசதிக்காக அதனை 4 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ராஜ்பரின் கருத்துக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள கூட்டணி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சஞ்சய் நிஷாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மேலும், மாநிலம் தற்போது பல்வேறு துறைகளில் முன்னேறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைப் பிரிப்பது தொடர்பான முயற்சி 2011-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது முதல்வராக இருந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி அரசு, மாநிலத்தை 4 பகுதிகளாகப் பிரிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பிறகு, 2012-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அந்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் உத்தரப் பிரதேசத்தை 4 மாநிலங்களாகப் பிரிப்பது குறித்த விவாதம் தொடங்கியுள்ளது.

