உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா அருகே யமுனா விரைவுச்சாலையில் ஓடிக்கொண்டிருந்த தூங்கும் வசதி கொண்ட தனியார் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் மகோபா நோக்கி தனியார் தூங்கும் வசதி கொண்ட பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் சுமார் 30 முதல் 35 பயணிகள் இருந்துள்ளனர். நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில், பேருந்திது திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக பேருந்து முழுவதும் பரவியதால் பயணிகள் பலர் பேருந்தின் ஜன்னல்கள் வழியாக வெளியேறி உயிர் தப்பினர். இந்த விபத்தில் 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், பேருந்துக்குள் 9 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேருந்தில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காவல்துறையினரால் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பேருந்து தீப்பிடித்த நேரத்தில் பெரும்பாலான பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், இதனால் தீ விபத்து ஏற்பட்டதை உணர்ந்து வெளியேறுவதற்கு அவர்களுக்கு குறைந்த நேரமே கிடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி, முதல்வர் யோகி இரங்கல்
கிரேட்டர் நொய்டா பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் தகவல் கேட்டறிந்து, காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ‘உத்தரப் பிரதேச மாநிலத்தை 4 ஆக பிரிக்க வேண்டும்’ – அமைச்சரின் பேச்சால் பரபரப்பு

