காலை உணவில் பல்லி : 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவை சாப்பிட்ட மாணவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இன்று காலை வழக்கம்போல் மாணவர்களுக்கு காலை உணவாக கிச்சடி வழங்கப்பட்டது. அப்போது, ஒரு மாணவரின் உணவில் பல்லி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்து உணவு சாப்பிடுவதை நிறுத்தியுள்ளனர்.

உணவு சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர்களின் உடல்நிலையை கேட்டறிந்தார். மேலும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பள்ளியில் உணவு தயாரிக்கும்போது ஆசிரியர்கள் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பட்டினப்பாக்கம் திட்டத்துக்கு எதிர்ப்பு: பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகமா?

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial