தனியார் பால் விலை மீண்டும் உயர்வு: பால் வாங்குவோருக்கு மீண்டும் அதிர்ச்சி

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தனியார் பால் நிறுவனங்களும் உற்பத்தியாளர்களிடம் வழங்கும் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளன. இதன் காரணமாக விற்பனை விலையிலும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஆரோக்கியா நிறுவனம் செப்டம்பர் 21ஆம் தேதி பால் விலையை லிட்டருக்கு ரூ.4 வரையும், தயிர் விலையை கிலோவுக்கு ரூ.2 வரையும் உயர்த்தியது. இந்நிலையில் டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, சீனிவாசா, வல்லபா, ஜெர்சி உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் விலையை உயர்த்துகிறது.

500 மில்லி சமன்படுத்தப்பட்ட பால் ரூ.31-ல் இருந்து ரூ.32 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் உயருகிறது.

இதேபோல், ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.59-ல் இருந்து ரூ.61 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.68-ல் இருந்து ரூ.70 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.78-ல் இருந்து ரூ.81 ஆகவும் உயர்த்தப்படுகிறது. 500 கிராம் தயிர் விலையும் ரூ.1 உயர்த்தப்படுகிறது.

தனியார் பால் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஆவின் விலை குறைவாக இருப்பதால் அதன் மீதான நுகர்வோர் தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே சில பகுதிகளில் ஆவின் பால் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் விலை மட்டுமின்றி, பால் விநியோகமும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial