பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படம் தியேட்டரில் வெளியாகவில்லை. நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக குத்துச்சண்டை காட்சிகள், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் வடசென்னை வாழ்க்கை முறை படத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்தன.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் அடுத்த பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன.
இந்த படத்தின் கதைக்களம் 1940 மற்றும் 1950-களின் சென்னை பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த காலகட்டத்தில் இருந்த குத்துச்சண்டை கலாச்சாரம், சமூக வாழ்க்கை மற்றும் அரசியல் சூழலை மையமாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை அம்பத்தூரில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

