ஹைதராபாத்தில் உள்ள ஒரு PVR திரையரங்கில் படம் பார்க்க சென்ற ஒருவர் நீண்ட நேரம் விளம்பரங்களும் முன்னோட்டக் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டதால் அதிருப்தியடைந்த அவர், நுகர்வோர் ஆணையத்தை அணுகியுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தனது நண்பருடன் தியேட்டருக்கு சென்றுள்ளார். படம் இரவு 10.35 மணிக்கு தொடங்க வேண்டிய படம் திட்டமிட்ட நேரத்தில் தொடங்காமல் சுமார் 17 நிமிடங்கள் விளம்பரங்கள் ஒளிபரப்பாகியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அவர் நுகர்வோர் ஆணையத்திற்கு சென்றுள்ளார்.
திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு அதிக நேரம் வணிக விளம்பரங்களை ஒளிபரப்பியது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். திரையரங்கில் விளம்பரங்கள், திரைப்பட முன்னோட்டங்கள் மற்றும் பொது விழிப்புணர்வு தொடர்பான காணொளிகளை ஒளிபரப்புவது நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளின் ஒரு பகுதி என PVR தரப்பும் தனது வாதத்தை முன்வைத்தது.
இந்த வழக்கை விசாரித்த ஹைதராபாத் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், பொது சேவை விழிப்புணர்வு திரைப்படங்கள் இரண்டு நிமிடங்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும் என்றும், திரைப்படம் தொடங்குவதற்கு முன்பான குறிப்பிட்ட காலத்துக்குள் அவற்றை ஒளிபரப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை ஆணையம் சுட்டிக்காட்டியது.
மேலும், PVR-க்கு எதிராக மொத்தம் ₹75,000 செலுத்த உத்தரவிட்டது. இதில் ₹20,000 நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கான இழப்பீடாகவும், ₹5,000 வழக்குச் செலவுக்காகவும் வழங்கப்பட வேண்டும். மேலும் ₹50,000 மாவட்ட நுகர்வோர் நல நிதியில் செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

