அன்றாட வாழ்க்கையில் நாம் அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் பிளாஸ்டிக் பைகளும் ஒன்று. கடைகளில் வாங்கும் சிறு சிறு பொருட்களுக்கு கூட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகிறோம். சில நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த பைகள், சுற்றுசூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பிளாஸ்டிக் பைகள்தான் இன்றளவும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைப்பது ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் கடைக்குச் செல்லும்போது துணிப்பையை எடுத்துச் செல்லும் பழக்கத்தை கொண்டு வந்தால் படிப்படியாக மாற்றத்தை கொண்டு வர முடியும்.
ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பை குப்பையாக மாறிய பிறகும் நீண்ட காலம் சுற்றுசூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மண் மற்றும் நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேரும் அபாயம் அதிகரிக்கிறது. குப்பைகளுடன் கலந்த பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் தவறுதலாக உட்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதனால் அவற்றின் செரிமான அமைப்பில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
பிளாஸ்டிக் பைகளை எரிக்கும்போது அவற்றிலிருந்து மிகவும் ஆபத்தான ரசாயனங்கள் வெளியேறுகின்றன. இதனை மனிதர்கள் சுவாசிக்கும் போது அவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும். இதில் இருந்து வெளிவரும் புகையை சுவாசிப்பதால் கண்கள், மூக்கு மற்றும் தொண்டையில் உடனடியாக எரிச்சல் ஏற்படலாம். துணிப்பைகளை நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். நல்ல தரமான துணிப்பையை பலமுறை பயன்படுத்த முடியும். ஒரே துணிப்பையை பலமுறை பயன்படுத்துவதால் பிளாஸ்டிக் பைகளின் தேவையை குறைக்க முடியும்.
மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் துணிப்பை திட்டம்
தமிழகத்தில் கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது ‘துணிப்பை திட்டம்’ என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், துணிப்பை வழங்க, இயந்திரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 105 இடங்களில் இயந்திரங்கள் வைப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

