அக்டோபர் முதல் வாரம் தியேட்டரில் வெளியாகும் முக்கிய படங்கள் என்னென்ன?

அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் விஜய் சேதுபதியின் ‘பத்தா’, ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’, ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’, ‘மிஸ்டர் பாரத்’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. காந்தி ஜெயந்தி மற்றும் அதனைத் தொடர்ந்து வார விடுமுறை வருவதால் திரையரங்குகளில் அதிக கூட்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

பத்தா

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். 1980-களின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏழு கடல் ஏழு மலை

ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படமும் அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி.புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

மிஸ்டர் பாரத்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரித்த ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரோமோ விடியோவும் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் இதில் யூடியூபர் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன் நடித்துள்ளார்கள்.

சிக்மா

அக்டோபர் 2-ம் தேதி, காந்தி ஜெயந்தி நாளில் ‘சிக்மா’ திரைப்படம் வெளியாகிறது. முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இதில், சந்தீப் கிஷன், ஃபரியா அப்​துல்​லா, ராஜு சுந்​தரம், அன்​பு​தாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்​டா, மகாலட்​சுமி சுதர்​சனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அன்பில் அவன்

அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் ‘அன்பில் அவன்’ என்ற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு அக்டோபர் 2 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்

ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பஹத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்”. இப்படத்தில், சாரா பலேகர், சவுரப் சச்தேவ், மகேஷ் மஞ்ரேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial