அக்டோபர் மாதம் தொடங்கியுள்ள நிலையில், சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், குறிப்பிட்ட வகை SBI சேமிப்புக் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு பணம் எடுப்பது தொடர்பான புதிய கட்டண விதிகளும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
வணிக சிலிண்டர் விலை உயர்வு அமல்
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட காரணங்களை வைத்து எல்பிஜி சிலிண்டர் விலையை மாற்றி வருகின்றன. அந்த வகையில், அக்டோபர் 1, 2026 முதல் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.66.50 அதிகரித்து ரூ.2,983 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் வணிக சிலிண்டர் விலை ரூ.62.50 அதிகரித்து ரூ.2,810 ஆகவும், மும்பையில் ரூ.63 உயர்ந்து ரூ.2,764 ஆகவும் உள்ளது. பாட்னாவில் ரூ.71.50 வரை விலை உயர்ந்து, 19 கிலோ சிலிண்டர் ரூ.3,100.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ 957.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
SBI ATM விதிகளில் மாற்றம்
BSBD கணக்கு வைத்திருக்கும் SBI வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 1 முதல் புதிய கட்டண விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ஒரு மாதத்தில் 4 முறை பணம் எடுத்த்தால் அதற்கு பரிவர்த்தனை கட்டணம் கிடையாது. அதற்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 + GST கட்டணம் வசூலிக்கப்படும்.
WhatsApp Business கட்டண மாற்றங்கள்
வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் WhatsApp Business சேவையிலும் அக்டோபர் 1 முதல் சில கட்டண மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பிட்ட வகையான வணிகச் செய்திகளுக்கு புதிய கட்டண நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இதையும் படிங்க : அக்டோபர் முதல் வாரம் தியேட்டரில் வெளியாகும் முக்கிய படங்கள் என்னென்ன?

