இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
வெளியானது முதலே ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. நடிகர் தனுஷ், நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோரும் ‘டோரதி’ படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில், ‘டோரதி’ படத்தின் கதை தன்னுடைய கதை என மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் குறும்பட இயக்குனர் முகமது செரிப் என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் மதுரையில் மொபைல் கடை நடத்தி வருகிறேன். கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா நேரத்தில் ‘டாட் நங்கை’ என்ற பெயரில் திருநங்கைகள் குறித்த 3 நிமிட குறும்படம் ஒன்றை தயாரித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான திருநங்கை பற்றிய ‘டோரதி’ என்ற திரைப்படத்தை பார்த்த சிலர், எனது குறும்பட கதை போன்று இருப்பதாக என்னிடம் கூறினர். நானும் அப்படத்தை பார்த்தபோது. எனது குறும்பட கதைக்கருவை என்னுடைய அனுமதியின்றி திருடி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ‘டோரதி’ திரைப்படத்தை வெளியிட்டுள்ளார். எனவே இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

