உலகமே கொண்டாடும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்! நடுவானில் நடந்தது என்ன?

துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற ஃபிளை துபாய் விமானத்தில் நடக்க இருந்த மிகப்பெரிய ஆபத்தை இந்தியாவை சேர்ந்த விமானி ஸ்மித் மச்சார் முறியடித்தார். இந்நிலையில், அவரை ஹீரோ என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புகழ்ந்துள்ளனர்.

செப்டம்பர் 30 அன்று ஃப்ளை துபாய் நிறுவனத்தின் விமானம் துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 174 பயணிகள் இருந்துள்ளனர். விமானம் சுமார் 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமானி அறைக்குள் கேப்டன் ஸ்மித் மச்சாருக்கும் துணை விமானிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின்போது துணை விமானி, ஸ்மித் மச்சாரை கத்தியால் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கேப்டன் மச்சார் பலத்த காயமடைந்தார். கத்தியால் தாக்கப்பட்டு, பலத்த காயமடைந்த நிலையிலும், அவர் தாக்குதலுக்கு எதிர்த்து போராடினார். இதனால் பெரும் விமான விபத்து தடுக்கப்பட்டு 174 பயணிகளும் காப்பாற்றப்பட்டனர்.

ஸ்மித் மச்சார் தற்போது தபூக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பாராட்டு

விமானி ஸ்மித் மச்சாரின் வீரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு மாவீரர். பெரும் ஆபத்தை எதிர்கொண்டபோதும், படுகாயம் அடைந்தபோதும், மற்றவர்களின் உயிரைக் காக்க அவர் அளவற்ற தைரியத்தையும் அசைக்க முடியாத உறுதியையும் வெளிப்படுத்தினார். அவரது வீரம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி, ஒரு பெரும் துயரச் சம்பவத்தைத் தடுத்தது. கேப்டன் மச்சாரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. அவர் விரைவில் குணமடையவும், புத்துணர்ச்சி பெறவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கேப்டன் ஸ்மித் மச்சாரைப் பாராட்டியுள்ளார். கடுமையான ஆபத்து மற்றும் காயத்தையும் பொருட்படுத்தாமல் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற அவர் காட்டிய துணிச்சல் பாராட்டுக்குரியது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

யார் இந்த ஸ்மித் மச்சார்?

மும்பையைச் சேர்ந்தவர் ஸ்மித் மச்சார். அவர் 2022 ஜூன் மாதம் முதல் ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் போயிங் 737 ரக விமானத்தின் கேப்டனாக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு அவர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் சுமார் 11 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில், விமானிகளுக்குப் பயிற்சியளிக்கும் ‘லைன் டிரெய்னிங் கேப்டனாகவும்’ 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் 2022-ம் ஆண்டு ஜூன் வரை இருந்திருக்கிறார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial