பொதுமக்கள் அரசு சேவைகள் மற்றும் தகவல்களை எளிதாகப் பெறுவதற்காக America.gov என்ற புதிய இணையதளத்தை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு தொடங்கியுள்ளது. இதனை செப்டம்பர் 29, 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் தற்போது பிரச்சனை என்னவென்றால், இந்த புதிய செயற்கை நுண்ணறிவு உரையாடல் அமைப்பிடம் கேட்கப்பட்ட சில அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள், அரசாங்க கருத்துகளுடன் ஒத்துப்போகவில்லை என புகார் எழுந்துள்ளது.
டிரம்ப் அரசு உருவாக்கிய ஏ.ஐ சாட்பாட்டில், 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஏ.ஐ சாட்பாட், அமெரிக்க அரசு நிறுவனங்களின் முந்தைய மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி, தேர்தல் முடிவை மாற்றக்கூடிய அளவில் மோசடி நடைபெற்றதாக ஆதாரம் இல்லை என்ற தகவலை வழங்கியுள்ளது.
அடுத்ததாக, ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க எல்லையில் ஏற்பட்ட குடியேற்ற நிலைமை குறித்து கேட்கப்பட்டபோது, ‘படையெடுப்பு’ என்ற அரசியல் வரையறையை ஏற்காமல், அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரப்பூர்வ தரவுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசு சேவைகளின் தகவல்களை செயற்கை நுண்ணறிவு மூலம் வழங்குவது பொதுமக்களுக்கு வசதியாக இருந்தாலும், இதுபோன்ற பதில்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க : AI-யை ஒரே பொத்தானில் நிறுத்த முடியுமா? பில் கேட்ஸ் விளக்கம்

